நாலடியார் 04 : 04
அறன் வலியுறுத்தல்
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; – கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
நாலடியார் பாடல் 34 – சொல் பொருள் விளக்கம்
உடம்பைத் தக்கவழியிற் புண்ணியச் செயல் கட்குப் பயன்படுத்திக் கொள்க. நாம் பெற்றிருக்கும் இந்த உடம்பு பெறுவதற்கு அரிய உடம்பாகும்.இதனைப் பெற்றிருக்கும் பயனால் அடுத்துப் பெறப்போகும் நற்பிறவிக்கு வேண்டியனவற்றை இப்போதே மிகவும் செய்துகொள்க.அது கரும்பில் இருக்கும் சாறுபோல் அடுத்தப் பிறவிக்குத் தொடரும்.இந்தப் பிறவியில் பெற்றிருக்கும் உடம்பினைக் கரும்புச் சக்கைபோல் கிடக்கட்டும்.
‘அரும்பெறல் யாக்கை’ யென்றமையால் மக்கள் யாக்கை என்பது பெறப்படும். “மக்களுடம்பு பெறற்கரிது,”1 என்றார் பிறரும். யாக்கை கிடைத்தது ஓர் ஆக்கம் ; உலகத்தில் வாழவும் காரியங்கள் செய்யவும் முடிந்தது ; அந்த ஆக்கத்தைக் குறித்தற்கு ‘யாக்கைபெற்ற பயம்’ என்றார். அப்பயன் கொண்டு அறமும் செய்து கொள்க என்றற்குப் ‘பெரும் பயனும்’ எனவும் இயன்ற அளவும் என்றற்கு ‘ஆற்றவே’ எனவுங் கூறினார். ஏகாரம் இசை நிறை. ஊர்ந்த சாறு ஊர்ந்ததனால் உண்டான சாறு. ஆலைக்காரனுக்குக் கரும்பு அவன் பின் உதவிக்காக மிகவும் சாறு உதவித் தான் சக்கையாய்க் கழிந்தது ; அப்படியே அறவொழுக்முடையானுக்கு உடம்பு அவன் மறுமையுதவிக்காக மிகவும் புண்ணியம் உதவித் தான் கோது போலக் கழியும் தன்மையது என்று உவமையை விரித்துக் கொள்க ; நற்செயல்களில் உடம்பைச் சாறுபோலப் பிழிய வேண்டும் என்பது இது ; “வருந்தி உடம்பின் பயன் கொண்டார்,”2 என்பர் மேலும். அறவழிகளில் நல்ல உழைப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.
Virtue is the gain. The body mere refuse.
As the gain from the mortal frame now reached—
and which is so hard to reach—with all thy might
lay hold of virtue’s lasting good. As the juice
expressed from the sugar-cane ’twill afterwards be
thine aid, when the body goes like refuse flung
away.